இல்லம்தோறும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து தபால்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
இல்லம்தோறும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து தபால்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) இந்தியாவின் 75-ம் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதால் இந்த ஆண்டு அமுத பெருவிழாவாக இல்லம்தோறும் தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாகையில் அஞ்சலக உபகோட்ட கண்காணிப்பாளர் லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், நாகை தலைமை தபால் அதிகாரி திலகவதி மற்றும் தபால் ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நாகை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் சி.எஸ்.ஐ. பள்ளி, நாலுகால் மண்டபம், நீலா தெற்கு வீதி, கடைவீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.