ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரன் விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருந்த ரவிச்சந்திரன் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருந்த ரவிச்சந்திரன் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் ரவிச்சந்திரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு, தமிழக அரசு பரோல் வழங்கி இருந்தது. அவர், விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைக்கான நகல் உள்ளிட்ட கோப்புகளை பெறுவதற்காகவும், கையெழுத்திடுவதற்காகவும், சொந்த ஊரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு ரவிச்சந்திரன் மதுரை சிறைக்கு வந்தார். சிறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு விட்டு, இரவு 7.55 மணிக்கு விடுதலை செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வெளியே வந்த அவர் சிறைவாசலில் மண்ணை தொட்டு வணக்கினார். அவரை பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பூக்கள் கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
அனைவருக்கும் நன்றி...
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
துயரம் எனக்கானது, மகிழ்ச்சி அனைவருக்குமானது. உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்தது ஆறுதல் தருகிறது. எங்களது விடுதலைக்கு உழைத்த, அரசியல் தலைவர்கள், வக்கீல்கள், போராடிய, சிறைபட்ட உணர்வாளர்களுக்கும், போராளிகள் என அனைவருக்கும் நன்றி. அனைவரையும் நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவிக்க இருக்கிறேன். சமூகத்திற்கு, மக்களுக்கு பயன்படும் வகையில் எனது வருங்காலம் இருக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளை எனது தோழர்களோடு, குடும்பத்தினரோடு கலந்துமுடிவெடுப்பேன்.
இது, தாமதமான நீதி என்பது அனைவருக்கும் தெரியும். எனது தாயார் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விடுதலை என்பது, இத்தனை ஆண்டுக்கான வலி நிவாரணி. என் தாய், எனது சகோதரரின் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கையாலும், தோழர்களின் நம்பிக்கையாலும் விடுதலை ஆகி இருக்கிறேன்.
விடுதலைக்கு வித்திட்ட மதுரை
விடுதலைக்கான தொடக்க இடம் மதுரை தான். அரசியலுக்கு மதுரை என்பது போல எங்களது விடுதலைக்கு வித்திட்டதும் மதுரை தான். 2004-ம் ஆண்டிலயே எங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும். 15 ஆண்டுகள் எங்கள் விடுதலை தாமதமாகியது.
திருமணம் குறித்து தற்போது எந்த எண்ணமும் இல்லை. 31 ஆண்டு சிறை வாழ்க்கையில் எனக்கு மிஞ்சியது எனது தோழர்கள் தான். கணக்கிலடங்காதவற்றை இழந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவன்
அவர் நிருபர்களிடம் பேசி கொண்டிருந்த வேளையில், ரவிச்சந்திரனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செல்போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பேன் என அவருக்கு ரவிச்சந்திரன் பதில் அளித்தார்.
ரவிசந்திரன் சிறையில் இருந்த நாட்களில் வேலை செய்தற்கான, ஊதிய தொகையாக ரூ.31,902 வழங்கப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.