காவிரி நீர் விவகாரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கருத்து தெரிவிக்க வேண்டும்-வாட்டாள் நாகராஜ் பேட்டி
காவிரி நீர் விவகாரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் பேட்டி அளித்தார்.
ஓசூர்:
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர், வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர சாத்தியமில்லை. பெங்களூரு மாநகர மக்களுக்கே குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் அதே நிலைதானே? இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார். பிளாக் மெயில் செய்கிறார். இதில் அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின், "இந்தியா" கூட்டணியில் எந்த பொறுப்பிலாவது இருக்கட்டும். அதைப்பற்றி கவலைப்படாமல், கர்நாடக அரசை பொறுத்த வரையில், கர்நாடக மாநில மக்கள், கர்நாடகத்திற்கு தண்ணீர் என்பது தான் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் எங்கள் கட்சி சார்பில் கர்நாடகத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கி உள்ளோம். ரஜினிகாந்த் அதிகமாக பேசுகிறார். இந்த விவகாரத்தில் அவரது கருத்து என்ன? கமல்ஹாசன் கருத்து என்ன? அவர்களுக்கு எங்கள் நிலை, எங்கள் வலி, எங்கள் கண்ணீர் தெரியாதா? அவர்கள் இருவரும் வாய் மூடி மவுனியாக இருக்காமல் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.