குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. 2 நாட்களாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-11-17 19:21 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. 2 நாட்களாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கால்வாய்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புனல்வேலி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஊருணிபட்டியில் பிள்ளையார் கோவில் ஊருணி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கண்மாய் நிறைந்து வெளியேறும் நீர் விவசாய நிலத்தின் வழியாக இந்த ஊருணிக்கு வருவது போல் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் ஊருணி நிறைந்து விட்டதால், இதிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழியின்றி தற்போது அப்பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி கடந்த 2 நாட்களாக தேங்கி நிற்கிறது.

பொதுமக்கள் அவதி

இதனால் ஊருணிப்பட்டி வடக்கு பகுதியில் உள்ள 5 தெருக்களிலும் தற்போது குளம் போல் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளை சுற்றிலும் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கடந்த 2 நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

பாம்புகள் நடமாட்டம்

ஊருணியில் இருந்து பாம்புகள் தண்ணீர் வழியாக வீடுகளுக்கு அருகே நடமாடுவதால் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் தெரிவித்தனர்.இந்த பிரச்சினை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீடிப்பதால், ஊருணியில் இருந்து தண்ணீர் வெளியேற முறையான வடிகால் வசதி செய்து தர பல முறை வலியுறுத்தியும், இதுவரை பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர்.தண்ணீர் தேங்காத வகையில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்