வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் பள்ளி வளாகத்தில் புகுந்த மழைநீர்

கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2022-12-13 18:35 GMT

சாரல் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இந்த மழை சிறிது நேரம் பெய்து நின்றது. மேலும் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடையில் லேசாக தூறல் மழை பெய்தது. இருப்பினும் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதேபோல மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, திருவரங்குளம் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மழையில் நனைந்து சென்ற மாணவர்கள்

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று காலை திடீரென பெய்த கனமழை தொடர்ந்து சில மணி நேரம் வரை நீடித்தது. இதனால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பூக்கள் பறிக்க முடியாமல் அவதிப்பட்டனர். அதே போல பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கீரமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.

சாலைகளில் தேங்கும் தண்ணீர்

கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் தற்போது காணாமல் போய்விட்டது. இதனால் மழைத்தண்ணீர் சாலைகளில் ஓடி ஆங்காங்கே தேங்கி சாலைகள் உடைந்து நாசமாகி வருகிறது.

மேலும், கீரமங்கலம், அக்னிப்பஜார் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், சாலையோர வாய்க்கால்கள் முற்றிலும் காணாமல் போனதால் கடைவீதிகளில் சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடிய மழைத்தண்ணீர் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். ஆகவே சாலையோர வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை சீரமைத்தால் தண்ணீர் சேதங்களை தவிர்க்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கியில் நேற்று காலை 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழை தண்ணீர் செல்ல போதுமான வாய்க்கால் இல்லாததால் அண்ணா சிலை, பட்டுக்கோட்டை சாலை அக்ரஹாரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை தண்ணீர் அதிக அளவில் தேங்கியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்றது. இதனால் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும் அவதிப்பட்டனர். இந்த மழையின் காரணமாக சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. அறந்தாங்கி நகர் பகுதியில் மழை தண்ணீர் சாலையில் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-2, புதுக்கோட்டை-1, கந்தர்வகோட்டை-20, கறம்பக்குடி-23.20, மழையூர்-3.80, கீழணை-17.60, திருமயம்-17, அரிமளம்-2.40, அறந்தாங்கி -41.90, ஆயிங்குடி-18.80, நாகுடி-6.20.

Tags:    

மேலும் செய்திகள்