மழைநீர் வடிகால் பணிகளை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு

செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-29 22:42 GMT

சென்னை,

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தநிலையில் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

செம்மஞ்சேரி டி.எல்.எப். அருகில் மதுரபாக்கம் ஓடையில் ஒரு கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து டி.எல்.எப். குடியிருப்பு பகுதிக்கு இடையில் செல்லும் சாலை வழியாக பெரு மூடுவடிகால்வாய் அமைக்கும் பணிகளையும்; நூக்கம்பாளையம் பாலம் அருகில் அரசன்கழனி கால்வாயில் இருந்து பொலினினி குடியிருப்பு பகுதி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு கட்டிடம் மற்றும் செம்மஞ்சேரி கால்வாயின் இருபுறமும் நூக்கம்பாளையம் பாலம் வரை தாங்குசுவர் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகளையும்;

நேதாஜி நகர் பிரதான சாலை அரசங்கழனி வேலன் தாங்கல் ஏரியில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து அரசன்கழனி ஏரியில் இருந்து கழுவெளி வரை பெருமூடு வடிகால்வாய் பணிகளையும்; பள்ளிக்கரணை அணை ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ள நீரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக பள்ளிக்கரணை அணை ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரையில் மூடிய பெருவடிகால்வாய் அமைக்கும் பணிகளையும்;

அக்டோபர் மாதத்திற்குள்...

வேளச்சேரி - தாம்பரம் சாலையில் தாமரைக்குளம் முதல் பள்ளிக்கரணை என்.ஐ.ஓ.டி. வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வெள்ள நீர் சென்றடையும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளையும்; வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி 1 முதல் 4 பிரதான சாலைகள் 6-வது குறுக்கு தெரு மற்றும் 7-வது குறுக்கு தெரு வரையிலான மொத்த பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு 6 தெருக்களில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும்;

அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில், திருவேங்கடம் தெரு, கோவிந்தராஜபுரம் 1-வது, 2-வது தெரு, கஸ்தூரிபாய் நகர் 1-வது தெரு மற்றும் கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலைகளை இணைத்து சிதிலமடைந்த பழைய கால்வாய்களை இடித்து புதிய ஒருங்கிணைந்த கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டு 5 தெருக்களில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும்;

அடையாறு, இந்திரா நகர் 3-வது பிரதான சாலையில், இந்திரா நகர், திருவான்மியூர் கண்ணப்பன் நகர், கணேஷ்நகர், காமராஜ் நகர், இந்திரா நகர் பிரதான சாலைகளை இணைத்து சிதிலம் அடைந்த பழைய கால்வாய்களை இடித்து புதிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதியின் கீழ் 21 தெருக்களில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளும் என மொத்தம் ரூ.174.48 கோடி மதிப்பில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று தொடர்புடைய துறை அலுவலர்களை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

பங்கேற்றோர்

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க. பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, அரவிந்த் ரமேஷ், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கண்காணிப்பு அலுவலர் வீரராகவராவ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்