ரூ.30¼ லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

சேலம் மாநகராட்சி 6-வது வார்டில் ரூ.30¼ லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Update: 2023-04-02 19:45 GMT

சேலம் மாநகராட்சி 6-வது வார்டு அன்னை இந்திரா நகர் 3, 4 மற்றும் 5-வது குறுக்கு தெருக்களில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பங்கு தொகை ரூ.10 லட்சத்து 10 ஆயிரம், அரசு பங்களிப்பு ரூ.20 லட்சத்து 26 ஆயிரம் என மொத்தம் ரூ.30 லட்சத்து 36 ஆயிரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இதற்கு அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் வக்கீல் குமரன் தலைமை தாங்கினார். தலைவர் வசந்தகுமார், பொருளாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும் போது, சேலம் மாநகராட்சியில் 2021-2022-ம் ஆண்டில் மழைநீர் வடிகால், கூடுதல் வகுப்பறை கட்டிடம், குடிநீர் விஸ்தரிப்பு பணிகள், சாலைப்பணிகள் என மொத்தம் 22 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று 2022-2023-ம் ஆண்டில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2 கோடியே 9 ஆயிரம், அரசின் பங்கு தொகையாக ரூ.4 கோடியே 18 லட்சம் என ரூ.6. கோடியே 27 லட்சத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க துணைத்தலைவர் பூபதி, இணைச்செயலாளர் காமகோடி, நிர்வாகிகள் விஜய்ஆனந்த், முத்துசாமி, செந்தில்குமார், கிஷான், சந்திரன் மற்றும் வார்டு பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்