செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

3 நாள் தொடர்மழையின் போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

Update: 2022-11-04 08:30 GMT

கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக விட்டுவிட்டு கன மழை பெய்தது. ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர், கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அமுதம் காலனி, மகாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், மற்றும் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் செல்லும் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலான மழை பெய்துள்ளது.

தண்ணீர் தேங்கவில்லை

பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை, ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியதை வெளியேற்றி விட்டோம். குறிப்பாக நந்திவரம், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, உள்ளிட்ட இடங்களில் ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் மகாலட்சுமி நகர் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லக்கூடிய பகுதியாகும்.

இது மிகவும் பாதிப்பிற்குள்ளான பகுதி, கடந்த ஆண்டு இந்த பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கு வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் இந்த பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணியும், புதிய வடிகால்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 60 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு அலுவலரை நியமித்து கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

கண்காணிப்பு அலுவலர்

குறிப்பாக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்‌.டி. சாலையில் மழைநீர் தேங்குவது இனிமேல் இருக்காது. அந்த இடத்தில் வடிகால்வாயில் இருந்த அடைப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் புதிய கல்வெட்டு அமைப்பதற்கான மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பகுதிக்கு மட்டும் தனியாக ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளது. குருவன்மேடு தரைப்பாலத்தை பொறுத்தவரை மழைக்காலங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. மக்கள் செல்வதற்கான மாற்றுப்பாதை உள்ளது.

ஒரு இடத்தில் மட்டும் தரைப்பாலப்பணிகள் முடிந்துள்ளது. அதில் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், விரைவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக மற்றொரு இடத்தில் தரைப்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குஜராஜ், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வெளியேற நெடுஞ்சாலை துறையின் சார்பில் 58.8 கிலோமீட்டரில் ரூ 23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் செங்கல்பட்டு சப் கலெக்டர் ஷாஜீவனா நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் செல்வகுமார் உடன் இருந்தனர்.

இது போல செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் விஞ்சியம்பாக்கம் ஏரியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மத்தியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயையும், மதகையும் பார்வையிட்டார். பின்னர் ஏரிக்கரையை சுற்றியுள்ள இடங்கள் யாருடையது என்று கேட்டார் அப்போது ஊராட்சி மன்றதலைவர் விஜயலட்சுமி துரைபாபு, கோவிலுக்கு சொந்தமானது என்று கூறினார். கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று ஏரியை விரிவாக்கம் செய்யக்கோரினார்.

இந்த ஆய்வின் போது வார்டு உறுப்பினர்கள் சுதாகர், சதீஷ், ஊராட்சி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்