நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டியது

பவானிசாகர் அணை

Update: 2022-11-04 20:36 GMT

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டியது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும் தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்த அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது.

103 அடியை எட்டியது

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 538 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102.58 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 622 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 103.02 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் மட்டும் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்