520 அரசு பள்ளிகளில் வானவில் மன்றம்

கடலூர் மாவட்டத்தில் 520 அரசு பள்ளிகளில் வானவில் மன்றத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-28 18:45 GMT

கடலூர்:

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் 'வானவில் மன்றம்" என்ற திட்டத்தை திருச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டந்தோறும் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

520 பள்ளிகளில் தொடக்கம்

விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 275 அரசு நடுநிலை, 116 உயர்நிலை மற்றும் 129 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 53,707 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

ஆலோசனைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே ஸ்டெம் (Science Technology Engineering and Mathematics) திட்டம்.

அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இணைந்த செயல் திட்டமாகும். இந்த திட்டத்தின் முதல் படியாக மாவட்ட அளவிலான கலந்துரையாடலில் வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணிதக்கற்றலை மிகவும் எளிமையாகவும், திறமையாகவும் நிகழ்வுகளை அமைக்க ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தாமாக முன்வந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

வடிவமைப்பு

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடினமானவை என கருதப்படும் தலைப்புகளை பட்டியலிடப்பட்டு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. கேள்வி கேட்பது மற்றும் ஆராய்வதன் மூலம் மாணவர்கள் திறம்பட கற்க முடியும் என்பதால் மாநிலம் முழுவதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களின் அனுபவப்பூர்வமான உள்ளீடுகள் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான செயல்திட்டங்கள் இத்திட்டத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளை செய்து காட்ட வேண்டும். மாணவர்களிடையே புதுமைகளை அடையாளம் காணவும், அவர்களை செய்து கற்றல் முறையில் தாமாகவே அறிவியல் சோதனைகளை செய்து பார்த்திட, ஊக்கமளித்திடவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இணைந்து செயல்படுவார்கள்

இத்திட்டத்திற்காக ஆர்வமும், செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இத்திட்டத்தினை பள்ளிகளில் செயல் முறையாக செய்து மாணவர்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவார்கள். அதற்கு தேவையான துறை கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள்.

இக்கருத்தாளர்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளை செய்து காட்டி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தி "செய்து கற்கும்" அனுபவத்தை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவியாக செயல்படுவார்கள். அன்றாட சூழ்நிலையில் காணப்படும் அறிவியல் தொடர்பான நிகழ்வு கள் குறித்து உரையாடல்கள் அதிக அளவில் அமையும் வகையில் இத்திட்ட கருத்தாளர்களும் ஆசிரியர்களும் இணைந்து வகுப்பறையில் செயல்படுவார்கள்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக மாணவிகளின் அறிவியல் கண்காட்சியையும் கலெக்டர் பார்வையிட்டார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி வேலுச்சாமி, சங்கீதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்