சூறை காற்றுடன் மழை

ரிஷிவந்தியம் பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-28 18:45 GMT

ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரவலாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன் பின்னர் வெயில் சுட்டெரித்து வந்ததால் வெப்பம் தாங்க முடியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில் ரிஷிவந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள மரூர், கடம்பூர், கரையாம்பாளையம், எடுத்தனூர் பகுதியில் மாலை 4.45 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 20 நிமிடங்கள் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திருக்கோவிலூர்- சங்கராபுரம் செல்லும் சாலையில் 2 இடங்களில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் சூறை காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரும்புகள் சேதம்

இது குறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். இதேபோல் கரையாம்பாளையம்-அருதங்குடி சாலையிலும் 2 இடங்களில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. அதனையும் அதிகாரிகள் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இது தவிர பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளும் சாய்ந்து சேதமடைந்தன. இருப்பினும் கடும் வெயிலுக்கு இடையே 15 நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்