தமிழகத்தில் மேலும் 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்..!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் 29-ந் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ மழையும், பொன்னேரியில் 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 14 செ.மீ, தாமரைப்பாக்கத்தில் 9 செ.மீ, சோழவரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜமீன் கொரட்டூரில் 8 செ.மீ, திருவள்ளூரில் 7 செ.மீ, பூண்டியில் 6 செ.மீ, திருவாலங்காட்டில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.