திருப்பரங்குன்றத்தில் சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர்; பயணிகளுடன் சிக்கிய டவுன் பஸ்

திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரை கடந்தபோது நடுவழியில் டவுன் பஸ் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் தவித்தனர்.

Update: 2023-04-25 20:21 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரை கடந்தபோது நடுவழியில் டவுன் பஸ் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் தவித்தனர்.

ரெயில்வே சுரங்கப்பாதை

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

இப்பகுதியில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், என்ஜினீயரிங் கல்லூரி, திருக்கூடல்நகர் குடியிருப்பு, செங்குன்றம் நகர் குடியிருப்பு, மாயாண்டிசுவாமி கோவில், அய்யப்பன் கோவில், மாநகராட்சி மருத்துவமனை, கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகியவையும் அமைந்து உள்ளன. எனவே, இந்த சுரங்கப்பாதை வழியாக தினமும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். ேமலும் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்த சுரங்கப்பாதையில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து எப்போதும் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால் கோடைகாலத்திலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கும். சுரங்கப்பாதை வளாகத்திலேயே தண்ணீர் வெளியேற்ற கூடிய மின்மோட்டார் அறை இருந்தும், உடனுக்கு உடன் தண்ணீர் வெளியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே நீடித்து வருகிறது

அரசு பஸ் சிக்கியது

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மதுரை பகுதிகளில் மாலையில் அவ்வப்போது மழை பெய்தது. இந்த மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல தேங்கி நிற்கிறது.

நேற்று காலையில் மதுரை மாட்டு தாவணியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் ராஜாராம் ஓட்டி வந்தார். பஸ்சில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் பயணித்தனர். திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதைக்குள் பஸ்சை ஓட்டிச்சென்றார்..

ஆனால் அங்கு மழைநீர் அதிகமாக தேங்கி நின்றதால் பஸ் நடு சுரங்கப்பாதையில் தண்ணீரில் சிக்கி கொண்டது. டிரைவர் முயற்சி செய்தும் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் பஸ்சில் பயணித்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நிரந்தர தீர்வு

பின்னர் அவர்கள் பஸ்சில் இருந்து இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நனைந்தபடி சிரமப்பட்டு வெளியேறினர். இதையடுத்து அரசு போக்குவரத்து மீட்பு வாகனம் மூலமாக பஸ் மீட்கப்பட்டது. இதேபோல ஏற்கனவே இந்த சுரங்கப்பாதையில் அரசு பஸ்சும், மதுரை மாநகராட்சி குப்பை லாரியும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்