மழைநீர் தேங்கி நிற்கும் சாலை

பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாைலயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-24 19:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாைலயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழுதடைந்த சாலை

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2, காவயல், புஞ்சவயல் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்கு பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மழவன் சேரம்பாடி பயணிகள் நிழற்குடையில் இருந்து புஞ்சவயல் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக மேற்கண்ட பகுதி மக்கள் அன்றாட வேலை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்று வருகின்றனர்.

மேலும் கிராமங்களில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகள் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், பந்தலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை, மருத்துவ பரிசோதனைக்காக சென்று வருகிறார்கள். இதற்கிடையே மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சவயல் செல்லும் சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

பொதுமக்கள் அவதி

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சாலை குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பழுதடைந்த சாலை மேலும் பெயர்ந்து கிடக்கிறது. பொதுமக்கள், தொழிலாளர்கள் அவசர தேவைகளுக்கு நடந்து செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தண்ணீரை கடந்து செல்லும் வரை நீண்ட தூரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இல்லையென்றால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சென்று விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மழவன் சேரம்பாடி-புஞ்சவயல் சாலை தற்போது பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமாக மாறி விட்டது. தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகள், ஆட்டோக்கள், பிற வாகனங்கள் திடீரென பழுதடைந்து நின்று விடுகின்றன. இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்