மழைநீர் தேங்கி நிற்கும் சாலை
ஆனைமலை அருகே குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆனைமலை
ஆனைமலை அருகே குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சாலையில் குழி
ஆனைமலை அருகே சுள்ளிமேட்டுபதி, காக்கா கொத்திபாறை, கே.பி.எம்,காலனி, வெப்பரை உள்ளிட்ட கிராம மக்கள் ஆனைமலை-வெப்பரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளதால், விளைபொருட்கள் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் தென்னை மட்டை தொழிற்சாலைகள், கோவில்கள் உள்ளன. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் பலர் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனைமலை-வெப்பரை இடையே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலை குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழி இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
மழைநீர் வடியாமல் இருப்பதால், சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அங்கு ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன் புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளின் தலைமை நீரூற்று நிலையம் உள்ளது. இதனால் பணியாளர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஆனைமலை-வெப்பரை சாலை சுள்ளிமேட்டுப்பதி, காக்கா கொத்திபாறை, கே.பி.எம். காலனி பகுதிகளுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது. உப்பாறு பாலத்தில் இருந்து 2 கிலோ மீட்டருக்கு சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தெருவிளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் குழிகளில் தவறி விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.
பழுதடைந்த சாலையில் விளைபொருட்களை எடுத்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.