அரசு பஸ்சுக்குள் ஒழுகும் மழைநீர்; பயணிகள் அவதி

கூடலூர்-ஈரோடு இடையே இயக்கப்படும் அரசு பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்து வருகின்றனர்.

Update: 2022-09-05 15:26 GMT

கூடலூர், 

கூடலூர்-ஈரோடு இடையே இயக்கப்படும் அரசு பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்து வருகின்றனர்.

மேற்கூரை பழுது

கூடலூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பயணிகளுடன் செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. தொடர்ந்து மேற்கூரைகள், இருக்கைகள், படிக்கட்டுகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்யும் சமயத்தில் பஸ்சுக்குள் மழைநீர் வழிந்து ஓடுகிறது.

இதனால் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பஸ் ஈரோட்டில் இருந்து பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ்சுக்குள் மழைநீர்

அப்போது ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரை தொடர் கனமழை பெய்தது. மேலும் பஸ்சின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து இருந்ததால், அனைத்து இருக்கைகளின் மீதும் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள், குழந்தைகள் நனையும் அவல நிலை காணப்பட்டது. சிலர் தங்களது கைகளில் வைத்திருந்த குடைகளை பஸ்சுக்குள் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். தொடர்ந்து பஸ் கண்டக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

அவரும் வேறு வழியின்றி பயணிகளின் அதிருப்தியை சமாளித்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில் பயணிகள், வேறு பஸ்சை கூடலூருக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வேறு பஸ் மூலம் பயணிகள் கூடலூர் அழைத்து வரப்பட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நீண்ட தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்