வடகிழக்கு பருவமழை எதிரொலி : சென்னையில் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்!
சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
கடந்த டிசம்பர் மாதம் மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய அளவில் குழாய்கள் அமைக்கப்படும். ஆறுகளில் கலக்கும் வகையில் சென்னை முழுக்க இதற்காக குழாய்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த 4-5 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
சென்னையில் 90 சதவிகித பணிகள் முடிந்து இருந்தன. இந்த நிலையில்தான் நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
பொதுவாக சென்னையில் மழை பெய்தால் சுரங்கப்பாதைகளில் ஆனால் சென்னையில் முக்கியமான 15சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. உடனே இங்கிருந்து தண்ணீர் வெளியேறி உள்ளது. அதிகபட்சம் 15 நிமிடத்தில் தேங்கிய தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது.
இன்னும் சில பகுதிகளில் பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கே.கே நகர் போன்ற பகுதிகளில் இன்னும் பணிகள் முடியாமல் உள்ளன. இது போன்ற பகுதிகளில் மட்டும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இது போன்ற பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் ஓஎம்ஆர் பகுதியில் இன்னும் முழுமையாக பணிகள் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறி உள்ளது.
சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் சென்னை மாநகராட்சி, 6 சுரங்கப்பாதைகளையும் நெடுஞ்சாலைத்துறை 10 சுரங்கப்பாதைகளையும் சீரமைத்து வருகிறது. வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் கூட மழைநீர் தேங்காமல் வெளியேறி உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 மணி முதன் இன்று காலை 4 மணி நிலவரபடி சென்னை மழை நிலவரம்
வில்லிவாக்கம் - 10 செமீ, சென்னை நுங்கம்பாக்கம் -7.2 செமீ, சென்னை நந்தனம் - 5 செமீ பதிவாகி உள்ளது.