பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை, மாணவர்கள் வடிகால் அமைத்து வெளியேற்றினர்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை, மாணவர்கள் வடிகால் அமைத்து வெளியேற்றினர்.

Update: 2022-11-14 18:36 GMT


உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை, மாணவர்கள் வடிகால் அமைத்து வெளியேற்றினர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

உடுமலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிநிற்கிறது. அதேபோன்று உடுமலை தளிசாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்திலும் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கி நின்றது.

இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நடந்தபடி வகுப்புகளுக்கு சென்றனர்.

மழைநீரை அகற்றிய மாணவர்கள்

இதையடுத்து சில மாணவர்கள், பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை, மண்வெட்டியால் நீண்ட தூரத்துக்கு பள்ளம் தோண்டி வடிகால் அமைத்து வெளியேற்றினர். இதுபோன்ற வேலைகளை மாணவர்களை செய்யச்சொல்லக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உயர்அதிகாரிகள், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வேலைகளை மாணவர்கள் செய்துள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மழையில் நனைந்து விடாதே, தேங்கி நிற்கும் தண்ணீரை பார்த்து கடக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இந்த பள்ளியில் மாணவர்கள் மண்வெட்டி எடுத்து தண்ணீரில் வேலை செய்தனர். அப்போது சாரல் மழையும் பெய்தது. மேலும் கழிவறைகளுக்கு செல்லும் வழியிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவர்கள் தயக்கத்துடன் தண்ணீரில் இறங்கி சென்று வந்தனர்.

துப்புரவு பணியாளர்களை பயன்படுத்தியிருக்கலாம்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை தூய்மை பணியாளர்கள் வேலை செய்து அகற்றி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதை அப்புறப்படுத்துவதற்கு தேவையான தூய்மை பணியாளர்களை பள்ளிக்கு அனுப்பிவைக்கும்படி நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டிருந்தால் அனுப்பி வைத்திருப்பார்கள். இந்த பள்ளிக்கு அருகிலேயே நகராட்சி அலுவலகம் உள்ளது. அப்படியிருந்தும் இந்த பணிகளை தூய்மை பணியாளர்கள் மூலமாக செய்யாமல் மாணவர்கள் மூலம் செய்தது சரியில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்