கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்து வீணாகிய நெல்குவியல்
மேலூர் அருகே கொங்கம்பட்டி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல்குவியல் வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலூர்,
மேலூர் அருகே கொங்கம்பட்டி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல்குவியல் வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பலத்த மழை
மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையங்களிலும், தனியார்களிடமும் விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மேலூர் அருகே கொங்கம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்தில் ஆங்காங்கே மலை போல குவித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புயல் சின்னம் காரணமாக மதுரை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்றும் அவ்வப்போது மழை பெய்தது.
நெல்மணிகள் சேதம்
இந்த மழையின் காரணமாக கொங்கம்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் அனைத்தும் நனைந்து வீணானது. ஒரு சில விவசாயிகள் மழை பெய்வதை அறிந்து தாங்கள் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் மீது தார்ப்பாய்களை போட்டனர். சிலர் பிளாஸ்டிக் சாக்கு பைகளையும் போட்டனர். இருப்பினும் 2 நாட்கள் பெய்த மழையால் சாக்கு பை நனைந்து நெல்மணிகளும் நனைந்தன.
நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் ஆங்காங்கே குளம் போல தேங்கி நின்றன. இதை பார்த்த விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். இது குறித்து அவர்கள் கவலையுடன் கூறியதாவது:-
விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை உடனே கொள்முதல் செய்யவில்லை. அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்திருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக மழை பெய்து அறுவடை செய்த நெல்லை வீணாகி விட்டது.எனவே அரசு நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விளைபொருட்கள் மழையில் நனையாதவாறு கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.