சென்னையில் விட்டுவிட்டு பெய்த மழை
சென்னையில் விட்டுவிட்டு நேற்று மழை பெய்தது. தேங்கிய மழைநீரும் உடனுக்குடன் அகற்றப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த மழையால் தாழ்வான குடியிருப்புகள், சாலைகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு பிரச்சினையை சரிசெய்தனர்.
கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தைகளுடன் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
ஒரு படத்தின் இடைவெளியில் (இண்டர்வெல்) சற்று இளைப்பாறுவது போல, கடந்த 2 நாட்கள் சென்னையில் அவ்வப்போது மட்டும் லேசாகவே மழை பெய்தது. இதனால் மழைக்கு பயந்து முடங்கியிருந்த மக்கள் சகஜ நிலைக்கு வர தொடங்கினர். இந்த 2 நாட்களும் வெயிலும் 'சுள்'ளென அடித்தது.
இதற்காகவே காத்திருந்தது போல துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காயவைக்கும் நடவடிக்கைகளில் மக்கள் இறங்கினார்கள். கடைகளுக்கு சென்று தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டனர். இந்த 2 நாட்களும் அவ்வப்போது பெய்யும் சாரல் மழை, குளிர்ந்த காற்று, இதமான சூழல் ஓரளவு நிம்மதியை தந்தது.
விட்டு விட்டு பெய்த மழை
இந்தநிலையில் நேற்று காலை பொழுது சென்னைவாசிகளுக்கு மிக லேசான சாரல் மழையுடனே பொழுது தொடங்கியது. வானம் முழுவதும் பவுடர் பூசியது போல பளபளவென இருந்தாலும், நிலவிய இதமான சூழல் ரசிக்கும்படியாகவே இருந்தது. இந்தநிலையில் காலை 9 மணிக்கு மேல் நகரின் பல இடங்களில் சொட்டு சொட்டாக விழ தொடங்கிய மழை, அடுத்தடுத்த வினாடிகளில் வேகம் எடுத்து சாரை சாரையாக கொட்டியது.
அந்த வகையில் புரசைவாக்கம், பெரியமேடு, எழும்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், நுங்கம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் மழை பெய்தது.
சில நிமிடங்கள் அதிரடியாக கொட்டி தீர்ப்பதும், பல நிமிடங்கள் ஓய்வு எடுப்பதுமாக மழை கண்ணாமூச்சி ஆடியது. பகலில் இடையிடையே வெயிலும் தலைகாட்டியது. ஓரிரு இடங்களில் வெயிலுக்கு இடையே மழையும் பெய்தது. இரவிலும் அவ்வப்போது மழை பெய்தது.
மழைநீர் உடனுக்குடன் அகற்றம்
விட்டுவிட்டு பெய்த மழையால் சென்னையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சாலையில் தேங்கிய மழைநீரும் ஓரிரு நிமிடங்களில் வடிந்தது. தாழ்வான பகுதிகளில் ஏற்கனவே தேங்கியிருந்த மழைநீரும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது. மழை ஒருபுறம் பெய்தாலும், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முனைப்புடன் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அதேபோல தூய்மை பணியாளர்களும் அடாத மழையிலும் விடாது பணியாற்றினர்.
இதற்கிடையே இன்னும் ஓரிரு நாட்கள் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.