புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர் பகுதியில் மழைமின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதம்சூறாவளிக்காற்றில் மரங்கள்-மின்கம்பம் சாய்ந்தன

புஞ்சைபுளியம்பட்டியில் மின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதம் ஆனது

Update: 2023-05-08 21:11 GMT

புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர் பகுதியில் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோவில் கோபுரம் சேதமடைந்தது. மேலும் சூறாவளிக்காற்றில் மரங்கள், மின்கம்பம் சாய்ந்தன.

இடி-மின்னலுடன் மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டியது.

இந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் வெள்ளம் வழிந்தோடியது.

கோவில் கோபுரம் சேதம்

இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் புஞ்சைபுளியம்பட்டி அருகே பொன்னம்பாளையத்தில் உள்ள பழமையான மதிப்பாபுரி அம்மன் கோவில் கோபுரம் சேதமடைந்தது. மேலும் கோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகளும் சேதமானது. இதுதவிர கோபுரத்தில் குடியிருந்த 4 கிளிகள் மின்னல் தாக்கி இறந்தது.

மேலும் இதுபற்றி அறிந்ததும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு சென்றனர்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் கோவில் சேதமடைந்ததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். உடனே கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர்

அந்தியூர், பள்ளிபாளையம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சூறாவளிக்காற்றால் பள்ளிபாளையம் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புளியமரம் மற்றும் வேப்ப மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனை பொதுமக்கள் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்து கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்வினியோகத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்தியூர் வார சந்தையில் திடீர் மழையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சோலார்

சோலாரில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதேபோல் வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்