நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் நெல்லை மாநகர பகுதியில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. தச்சநல்லூர், பாளையங்கோட்டை, டவுன், கே.டி.சி. நகர், புதிய பஸ் நிலைய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சந்திப்பு பகுதியில் பெய்த மழையால் ரெயில் நிலையம் திரும்பும் சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.