கோத்தகிரியில் மழை:2 இடங்களில் மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்-போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி பகுதியில் 2 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-05 00:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் 2 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மழை

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தில் ஈரப்பதம் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள ராட்சத பைன் மரம் ஒன்று நிலத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக வேர்கள் பிடிப்பில்லாததால் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மின் கம்பிகள் மீது மரக் கிளைகள் விழுந்ததால் 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் விநியோகத்தை துண்டித்து, மின்கம்பிகளை வெட்டி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் மாதன், நித்தியானந்தன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் வாளால் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.


மேலும் நேற்று காலை முதல் மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலை வரை அந்த பகுதியில் மின்சார தடை ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதே போல நேற்று காலை 6.30 மணிக்கு கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் புதூர் அருகே சீகை மரம் ஒன்று சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சரிந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. மரம் முறிந்து விழுந்தால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்