கழுகுமலை பகுதியில் மழை:மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு

கழுகுமலை பகுதியில் பெய்த மழையால் மக்காச்சோளம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-25 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வேலாயுதபுரம், காலாங்கரைபட்டி, குமாரபுரம், துரைச்சாமி புரம், ராமநாதபுரம், லட்சுமிபுரம், வெங்கடேஸ்வரபுரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகும். இந்த ஆண்டு பருவ மழையை நம்பி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, உள்ளிட்டவைகளை பயிர் செய்தனர். முதலில் பெய்த மழை, பிறகு கடைசி நேரத்தில் சரிவர பெய்யாத காரணத்தால் பல இடங்களில் மக்காச்சோள பயிர்கள் மற்றும் உளுந்து பாசிப்பயறு உள்ளிட்ட செடிகள் காய்த்து பலன் தராமல் போய்விட்டது.

இதற்கிடையே தற்போது சில கிராமங்களில் ஓரளவுக்கு மக்காச்சோளம் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் மக்காச்சோள பயிர்களை களத்தில் போட்டு பிரித்தெடுத்து காய போட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி போஸ் கூறுகையில், இந்த மாதத்தில் புயல் காரணமாக பெய்து வரும் மழையால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சில கிராமங்களில் உளுந்து, பாசிப்பயறு பயிரிட்ட விவசாயிகளும் மழையால் அதனை பிரித்தெடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடன் வாங்கி தொழில் செய்த விவசாயிகள் மேலும் கடன் சுமைக்கு ஆளாகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்