கூடலூரில் மழை: வீட்டின் சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் படுகாயம்

கூடலூரில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2023-07-23 19:00 GMT

கூடலூர்

கூடலூரில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

தொடர் மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மரங்களும் அடிக்கடி விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூரில் இருந்து தொரப்பள்ளி செல்லும் சாலையில் மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மூங்கில்களை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இரவு நேரம் என்பதால் வாகனங்கள் எதுவும் இயக்கப்பட வில்லை. பின்னர் மூங்கில்கள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் கூடலூர் காசிம்வயல் பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் தனக்கு சொந்தமான பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

தொழிலாளர்கள் படுகாயம்

அப்போது மாலை 3 மணிக்கு திடீரென வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சசிகுமார்(வயது 50), பாபு(30) ஆகியோர் சிக்கினர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சசிகுமார், பாபு ஆகியோரை மீட்டனர். அவர்கள் காயமடைந்து இருந்தனர்.

தொடர்ந்து அவர்களை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர். பின்னர் பணி நிறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்