திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2022-12-13 19:00 GMT

கொரடாச்சேரி;

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயலை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, பெருமாளகரம், களத்தூர், அபிவிருத்தீஸ்வரம், அம்மையப்பன், முகந்தனூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சாலைகளில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் மெதுவாக சென்றன. அதே நேரத்தில் விளைநிலங்களுக்கு இ்ந்த மழை நீர் பயனுள்ளதாக இருந்தது.நெற்பயிர் நடவு முடிந்து தற்போது களை எடுக்கும் சூழல் உள்ளது. தண்ணீர் தேவையை இந்த மழை ஈடு செய்து உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். அதே நேரத்தில் மழை தொடர்ந்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறினா்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் சிறிது நேரம் வெயில் அடிப்பதும், சிறிது நேரம் மேகமூட்டம் சூழ்ந்தும் வானம் காணப்பட்டது. இதனால், மழை பெய்யும் சூழலும் தென்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 2.40 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.பின்னர், படிப்படியாக மழை அதிகரித்து கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், நாகங்குடி, பழையனூர், ஓகைப்பேரையூர், நாகராஜன்கோட்டகம், ராமானுஜமணலி, பூந்தாழங்குடி, அரிவளூர், கீழமணலி, வடபாதி, பண்டுதக்குடி, திருராமேஸ்வரம், கோரையாறு, சித்தாம்பூர், விழல்கோட்டகம், வெள்ளக்குடி, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கியது. குடவாசலில் நேற்று நேற்று மதியம் 2 மணிக்கு இடைவிடாமல் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்

வலங்கைமான்

வலங்கைமான் பகுதியில் கடந்த மாதங்களாக அதிக அளவு மழை பெய்யவில்லை. இருப்பினும் கடந்த வாரம் 2 நாட்கள் கனமழை பெய்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று மதியம் கனமழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.இதைப்போல சம்பா தாளடி சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக விளை நிலங்கள், வெற்றிலை, வாழை தோட்டங்கள், காய்கறி சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக வலங்கைமான் பகுதியில் காய்கறி, பழங்கள், பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வல்லூர், மான்கோட்டை நத்தம், தச்சன்வயல், சமுதாயம், வல்லூர், பாளையக்கோட்டை, கன்னியாகுறிச்சி, பாவாஜிக்கோட்டை, களிச்சான்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வெயில் அடித்த நிலையில் திடீரென மாலை 5 மணி அளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. 

Tags:    

மேலும் செய்திகள்