திருப்பூர் அருகே அவினாசி மற்றும் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில், வாழைகள் சாய்ந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டது.
சூறாவளி காற்றுடன் மழை
கத்தரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் திருப்பூர் அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், ஆலத்தூர், மங்கரசு வலையபாளையம், கானூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன் பாளையம், வேட்டுவபாளையம், பொங்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை நீடித்தது.
வாழை மரங்கள் முறிந்தன
இதனால், சேவூர், ஆலத்தூர், வடுகபாளையம், பாப்பாங்குளம், நடுவச்சேரி, கருமாபாளையம், கானூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் வாழை மரங்கள் குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து சேதம் அடைந்தது.
இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனை கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
ஏக்கருக்கு ரூ.1½ லட்சம் செலவு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சூறாவளி காற்றால் சாய்ந்த வாழைகள், பயிரிட்ட 15 மாதங்கள் கழித்து அறுவடை செய்யும் பயிராகும். ஒரு வாழைக்கன்றை ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கி பயிரிட்டோம். இந்த கன்றை நடுவதற்கு முன்பு உழவு செய்ய வேண்டும் அதற்கு ஒரு கன்றுக்கு ரூ.10 செலவு ஆகிறது.
உழவுக்கு பின் கன்று நடுவதற்கு ரூ.10 ஆகிறது. மொத்தம் 70 ரூபாய் கன்று நடும் போதே செலவு ஆகிறது. அதன் பின் 15 மாத காலங்களில் உரம், பூச்சிமருந்துகளுக்கு செலவாகும். ஒரு வாழை மரத்திற்கு ரூ.150 வரை செலவு ஆகிறது. 1 ஏக்கரில் 1000 வாழைகள் நடுகிறோம். இந்த நிலையில் 1 ஏக்கருக்கு சுமார் ரூ.1½ லட்சம் செலவு ஆகிறது.
சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
குலை தள்ளி அறுவடைக்கு குறைந்த நாட்களே இருக்கும் போது இயற்கை சீற்றத்தால், சூறாவளி காற்றால் அனைத்து வாழை மரங்களும் சாய்ந்து எங்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. வருவாய் துறையினர் ஒவ்வொரு முறையும் கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு எந்தவித இழப்பீடு தொகையோ, நிவாரண தொகையோ எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.