திருப்பூரில் பலத்த மழை
திருப்பூரில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.
திருப்பூரில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதே போல் திருப்பூர் பகுதியிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தயங்கும் நிலை உருவானது. நாள் முழுவதும் கொளுத்தும் வெயிலால் இரவு நேரத்தில் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருப்பூரில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதன் காரணமாக ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி ரோடு, குமரன் ரோடு, பி.என்.ரோடு உள்பட மாநகரில் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
மக்கள் மகிழ்ச்சி
ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் ஆற்று பாலம், ஊத்துக்குளி ரோடு ரெயில்வே பாலம், போயம்பாளையம் பிரிவு உள்பட மாநகரில் உள்ள தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இவ்வாறு வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டாலும், நேற்று பெய்த மழையால் திருப்பூரில் கத, கதப்பான நிலை மாறி குளு, குளு சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில், அவினாசி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.