சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அடைமழை காரணமாக காங்கயம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அடைமழை காரணமாக காங்கயம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
'மாண்டஸ் புயல்' காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று அதிகாலை முதலே இடைவிடாமல் மழை தூறல் போட்டுக் கொண்டே இருந்ததாலும், கடும் குளிராலும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. காங்கயம் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழைக்கோட்டுக்களை அணிந்தபடி சாரல் மழையில் நனைந்தபடியே சென்றனர்.மேலும் பகல் நேரங்களிலேயே வாகனங்களின் முகப்பு விளக்கை எறியவிட்டவாரே செல்கின்றனர். சாலையோர கடைகளின் வியாபாரங்கள் முற்றிலும் முடங்கி போய் காணப்படுகிறது. மேலும் வெளியூர்களுக்கு வேலைக்காக செல்பவர்கள் காலை நேரத்தில் பெய்த மழையால் சிரமத்திற்குள்ளாகினர்.
மாணவ-மாணவிகள் தவிப்பு
மேலும் நேற்று காலை 7 மணி முதல் 9 மணி வரை பெய்த மிதமான மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் சிரமத்திற்குள் ளாகினர். மேலும் ஒரு சில இடங்களில் மழையில் செல்ல முடியாமல் சாலையோரங்களில் உள்ள கடைகளில் ஒதுங்கி நின்று மழை நின்ற பின் சென்றனர். இதனால் பள்ளிக்கு செல்வதற்கு சற்று தாமதம் ஏற்பட்டது.
காங்கயம் பகுதியில் தேங்காய் களங்களில் தேங்காய் உடைப்பு பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உடைத்து உலர்த்துவதற்காக களங்களில் காய வைக்கப்பட்டிருந்த தேங்காய் பருப்புகளை குவியலாக குவித்து வைத்து தார்ப்பாய்களை போட்டு மூடி வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
கடும் குளிர்
அடைமழை காரணமாக வீட்டில் இருக்கும் வயதான முதியோர் கடும் குளிரால் மிகவும் சிரமப்பட்டனர். காங்கயம் பகுதி மக்கள் சாரல் மழையாலும், கடும் குளிராலும் கடந்த 2 நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சுட்டெரிக்கும் சூரியனை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.