ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியபோதும், எதிர்பார்த்த அளவு மழை பெய்யாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பல பகுதிகளில் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்தநிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
குறிப்பாக ராமநாதபுரத்தில் நேற்று அதிகாலை முதல் பெய்த மழையால் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தை மழைநீர் சூழ்ந்தது.
நோயாளிகள் அவதி
நுழைவு வாசல் பகுதியிலும் மழைநீர் தேங்கியதால் நோயாளிகளும், ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்களும் அவதி அடைந்தனர்.
நடக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளை ஆஸ்பத்திரிக்குள் அழைத்து செல்வதிலும், சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு செல்லவும் சிரமம் அடைந்தனர்.
மழைநீரை அகற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிப்பதாக இருந்தது. ஏற்கனவே ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கழிவுநீரை அகற்ற சரியான வடிகால் வசதி இல்லாததால் அம்மா உணவகம் மற்றும் மகப்பேறு சிகிச்சை பகுதிக்கு செல்லும் வழியில் பல நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பெய்த மழையால் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்
ராமேசுவரம் பகுதியிலும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழையாக பெய்தது. இதனிடையே நேற்று காலையிலும் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
பஸ் நிலையம் எதிரே தற்காலிக துணி கடை பகுதிகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. அங்குள்ள போலீஸ் உதவி மையம் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது.
கோவில் ரதவீதி சாலை மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலையிலும் மழைநீர் ஆறு போல் ஓடியது. பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.