காரைக்குடி பகுதியில் பலத்த மழை
காரைக்குடி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
பலத்த மழை
தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த மழை தீவிரமடைந்துள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் இங்குள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது.
இந்நிலையில் தொடர்ந்து நேற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. காரைக்குடி பகுதியில் நேற்று காலை வானம் மந்தமான நிலையில் காணப்பட்டது. அதன் பின்னர் மதியம் 1 மணிக்கு மேல் திடீரென வானம் கருமேகமூட்டமாக காட்சியளித்தது. இதை தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தண்ணீர் தேங்கியது
அதன் பின்னர் சிறிது நேரம் ஓய்ந்த மழை மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் பெய்ய தொடங்கியது. இந்த மழையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. பலத்த மழை காரணமாக செக்காலை சாலை, வாட்டார் டேங்க் பகுதி, நூறடி சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி பகுதி, பழைய பஸ் நிலையம், கழனிவாசல் உள்ளிட்ட பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் வட்டார் டேங்க் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை பகுதி முழுவதும் தண்ணீர் வெள்ளமாக சூழ்ந்து. இதனால் பயணிகள் அங்கிருந்து பஸ் ஏறுவதற்கு சிரமம் அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. நேற்று ெபய்த பலத்த மழை காரணமாக இரவு குளுமையான நிலை காணப்பட்டது. குளிரும் அதிகமாக இருந்ததால் முதியவர்களும், நோயாளிகளும் சிரமம் அடைந்தனர்.
அதேபோல சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் வியாபாரங்கள் மற்றும் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தது. இந்த சாரல் மழையால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.