அம்மாபேட்டை அருகே ஏரி நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது- பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே ஏரி நிரம்பி உபரிநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே ஏரி நிரம்பி உபரிநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
ஏரி நிரம்பியது
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பூனாச்சி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. தொடர்ந்து மழை தண்ணீர் ஏரிக்கு வந்ததால் அதிக அளவு தண்ணீர் வெளியேறியது. இதனால் செந்தூர் நகருக்கு செல்லும் பாதை மூழ்கியது. அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவும், வெளியே வரவும் சிரமப்பட்டார்கள்.
மேலும் பெத்தக்காபாளையம், குறவர் காலனியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வயல்வெளிகள், ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுமட்டுமின்றி ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தாலும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
சாலை மறியல்
இந்தநிலையில் அந்த பகுதி மக்கள் திடீரென நேற்று காலை 8.30 மணி அளவில் அம்மாபேட்டை-அந்தியூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தாசில்தார் தாமோதரன், அட்டவணைப்புதூர் ஊராட்சி தலைவர் பூங்கொடி சென்னியப்பன், முகாசிபுதூர் ஊராட்சி தலைவர் பாரதி வெங்கடேசன், பூனாச்சி தலைவர் சின்ராசு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் வீரமுத்து மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம், 'ஏரி நிரம்பும்போது அதில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்காக 2 மதகு பாதை உள்ளது. அதில் ஒரு பாதையை அடைத்துவிட்டார்கள். அதனால்தான் தான் ஏரியின் உபரிநீர் ரோடுகளிலும், தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிக்கும் செல்கிறது. உடனடியாக அடைத்து வைத்திருக்கும் நீர்வழி பாதையை நீக்கி தண்ணீரை வெளியேற்றவேண்டும்' என்றார்கள். அதற்கு அதிகாரிகள் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.