ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு
ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
ஈரோட்டில் கடந்த சில நாட்களில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கோடை காலத்தை போல வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. நேற்று பகலிலும் வெயில் கொளுத்தியது.
இந்தநிலையில் மாலை 4 மணிஅளவில் வானில் திடீரென மேகங்கள் திரண்டன. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலைகளில் புழுதி பறந்ததால் நடந்து சென்றவர்களும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் மிகவும் சிரமப்பட்டார்கள். சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. காற்றுடன் சேர்ந்து பலத்த மழையாக பெய்தது. சுமார் அரை மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரமாக மழை தூறிக்கொண்டே இருந்தது.
தண்ணீர் தேங்கியது
இந்த பலத்த மழை காரணமாக சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அரை மணி நேரம் மட்டுமே மழை பெய்தாலும், பலத்த மழையாக கொட்டியதால் பல இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியது.
ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், பெரியவலசு, திண்டல், சம்பத்நகர், பழையபாளையம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம், கருங்கல்பாளையம் என மாநகர் பகுதி முழுவதும் மழை பெய்தது. பல இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் சாலைகளில் கழிவுநீருடன், மழைநீர் கலந்து சென்றதை காணமுடிந்தது. ஈரோட்டில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.