வேப்பனப்பள்ளி, மத்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வேப்பனப்பள்ளி, மத்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-06-05 16:41 GMT

கிருஷ்ணகிரி:

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுக்கு வேப்பனப்பள்ளியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்த 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. அப்போது அருகில் இருந்த மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்தததால் மின்வயரும் சாலையில் விழுந்தது. இதனால் சிகரமாகனபள்ளி, உண்டிகைநாத்தம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மின்ஊழியர்கள் மின் கம்பிகள் மற்றும் மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இதேபோல் மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதலே கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாலை சுமார் 3 மணி அளவில் திடீரென பலத்த காற்று அடித்தது. இதையடுத்து கனமழை பெய்தது. மேலும் ஆலங்கட்டிகள் வீதிகள் தோறும் விழுந்தன. வெயிலின் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொது மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சிறுவர்கள் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து வந்து விளையாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்