விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்கப்பாதை நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் சுற்றிச்சென்ற மாணவர்கள், பொதுமக்கள்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மழைநீரால் ரெயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது. அந்த தண்ணீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்காத நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுற்றிச்சென்றனர்.

Update: 2023-08-31 18:45 GMT

ரெயில்வே சுரங்கப்பாதை

விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம், பெரியார் நகர், கணபதி நகர், கட்டபொம்மன் நகர், இந்திரா நகர், காகுப்பம், பொய்யப்பாக்கம், எருமனந்தாங்கல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி விழுப்புரம் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பணிகளுக்கு செல்லக்கூடிய பணியாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த சுரங்கப்பாதையை இரவு, பகலாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் இங்குள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு மணி நேரம் மழை பெய்தால்கூட அதற்கு தாங்காமல் மழைநீர், இந்த சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் இதன் வழியாக செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படுகிறது.

மழைநீரில் மூழ்கியது

அதே போன்றுதான் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதுமாக தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதன் காரணமாக அந்த சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அவலநிலை ஏற்பட்டது. நகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்கள் பழுதடைந்திருந்ததால் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த மின் மோட்டார்கள் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே அதனை சரிசெய்யாமல் அலட்சியப்போக்கோடு செயல்பட்டதன் விளைவாக பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள், ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாமல் சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் நகர பகுதிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆபத்தான முறையில்

மேலும் அவ்வாறு சுற்றிக்கொண்டு செல்லாத பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், சுரங்கப்பாதையின் மேலே உள்ள ரெயில்வே தண்டவாளங்களை ஆபத்தான முறையிலும், அச்சத்தோடும் கடந்து சென்றதை காண முடிந்தது. பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாகவே ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இதுபோன்ற அவலநிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்