போடிப்பட்டி,
உடுமலையில் ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தைக் கடக்கும் சிறுவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேம்பாலம் கட்ட கோரிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- உடுமலை ெரயில் நிலையத்துக்கு மிக அருகில் ராமசாமி நகர் ெரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டைக் கடந்து ராமசாமி நகர், ஜீவாநகர், பழனியாண்டவர் நகர், கிரீன்பார்க் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். மேலும் அரசு கலைக்கல்லூரி செல்லும் மாணவர்கள், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் என்று பலரும் இந்த கேட்டைக் கடந்து சென்று வருகிறார்கள். இதுதவிர மலையாண்டிப்பட்டினம், குரல்குட்டை உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தைக்கு காய்கறிகளைக் கொண்டு வரும் விவசாயிகளும் இந்த கேட்டைக் கடந்து வருகிறார்கள். இதனால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த கேட்டைக் கடந்து செல்கின்றன. இவர்கள் ெரயில் வரும் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தண்டவாளத்தில் செல்பி
இந்தநிலையில் ெரயில்கள் இந்த பகுதியை கடக்கும் போது மூடப்பட்டுள்ள ரெயில்வே கேட் வழியாக பலரும் ஆபத்தான முறையில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்கிறார்கள். ெரயில்வே ஊழியர்கள் மற்றும் அவசர நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாதை வழியாக சிறுவர்கள் சைக்கிள்களை நுழைத்து, தாங்களும் நுழைந்து ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ெரயில் வரலாம் என்ற நிலையில் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் தண்டவாளத்தைக் கடப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார்கள். மேலும் ஒரு சில இடங்களில் மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே ரெயில்வே கேட் மற்றும் தண்டவாளப்பகுதிகளில் ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதும், அத்துமீறுபவர்களை கண்டிப்பதும், தண்டிப்பதும் விபத்துக்களைத் தடுப்பதற்கு அவசியமாகிறது. இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.