சேதம் அடைந்த ரெயில்வே சுரங்கப்பாதை

Update: 2023-09-05 17:42 GMT


உடுமலையில் சேதம் அடைந்த ரெயில்வே சுரங்கப்பாதையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரெயில்வே சுரங்கப்பாதை

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் பிரதான மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.அது தவிர ரெயில் பாதை குறுக்கிடும் சாலைகளில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் வழியாக நாள்தோறும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பழனியாண்டவர்நகர், ஜீவாநகர், ராய்லட்சுமிநகர், கண்ணமநாயக்கனூர் கிராமம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு ரெயில்வே சுரங்கப்பாதை முக்கிய பங்கு வகித்து வருகிறது.

தேங்கும் தண்ணீர்

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் குறுகிய நேரத்தில் சென்று வர முடிகிறது. இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதையின் முகப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் பாதை சேதமடைந்து உள்ளது. அதை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மழைக்காலங்களில் ெரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அதை விரைந்து அகற்றுவதற்கு ஏதுவாக அங்கு மின் மோட்டார் வைக்கப்பட்டு உள்ளது.அது தக்க தருணத்தில் செயல்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சுரங்கப்பாதைக்கு அருகில் விளக்குகள் அமைக்கப்படாததால் இருள் சூழ்ந்து உள்ளது.

மழைக்காலத்தில் இடையூறு

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ரெயில்வே சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வகையில் மின்மோட்டார் அமைக்கப்பட்டது.அது குறைவான திறன் கொண்ட மின்மோட்டார் ஆகும். மேலும் தண்ணீர் தேங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட குழியும் பெயரளவுக்கு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதற்கு அமைக்கப்பட்ட குழியை ஆழப்படுத்தி அதன் மீது பாதுகாப்பிற்காக வலை அமைக்க வேண்டும். மேலும் தண்ணீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்ட மின்மோட்டாரின் திறனை அதிகப்படுத்தி சேதம் அடைந்த குழாய்களையும் மாற்ற வேண்டும். அத்துடன் சேதம் அடைந்த பாதையையும் சீரமைத்து விளக்குகள் அமைக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்