தோணித்துறை ரெயில்வே கேட் இணைப்பு மேம்பால பணிகள் தொடக்கம்
நாகையில் தோணித்துறை ரெயில்வே கேட் இணைப்பு மேம்பால பணிகள் தொடங்கின. அப்போது கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் தோணித்துறை ரெயில்வே கேட் இணைப்பு மேம்பால பணிகள் தொடங்கின. அப்போது கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில்வே மேம்பாலம்
நாகை தோணித்துறை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள், அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.
ரெயில்கள் செல்லும் போது தோணித்துறை ரெயில்வே கேட் மூடப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இணைப்பு பாலம் அமைக்கும் பணி
இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ரெயில்வே துறை சார்பில் ரெயில்வேகேட் பகுதியில் மட்டும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான இணைப்பு பாலம் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்று, நிலம் கொடுத்தவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.
இந்த நிலையில் தோணித்துறை ரெயில்வே கேட்டில் இருந்து ரெயில் நிலையம் வரை இணைப்பு பாலம் செல்லும் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று தொடங்கின. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் நடந்த இந்த பணிகளின் போது பொக்லின் எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இந்த பணிகளின் போது ஒரு சில கடை உரிமையாளர்கள் கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான கால அவகாசம் கேட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.