அய்யலூரில் ரெயில்வே கேட் உடைந்து விழுந்ததால் பரபரப்பு

அய்யலூரில் ரெயில்வே கேட் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-09 17:31 GMT

வடமதுரை அருகே அய்யலூரில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக உள்ள சாலை செந்துறை, நத்தம் வழியாக மதுரை வரை செல்கிறது. இந்த சாலையை கிணத்துப்பட்டி, குருந்தம்பட்டி, தபால்புள்ளி, பஞ்சந்தாங்கி உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை அந்த  ரெயில்வே கேட்டில் உள்ள இரும்பு தடுப்பு கம்பி திடீரென்று உடைந்து விழுந்தது. அந்த நேரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ெரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைந்து விழுந்த ெரயில்வே கேட் இரும்பு தடுப்பு கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் மாற்றுப்பாதையில் சென்றனர்.

ரெயில்வே கேட்டை சரிசெய்வதற்காக கேட் மூடப்பட்டதால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே கேட் சரிசெய்த பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதற்கிடையே அந்த சாலையில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்