தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில் இயக்கப்படுமா?

Update: 2022-07-03 16:22 GMT


பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பலர் திருப்பூர்வாசிகளாக மாறிவிட்டனர்.

இவர்களில் பலர் வாரந்தோறும் சொந்த ஊருக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுபோல் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்வதற்கு பஸ் போக்குவரத்தையும், ரெயில் போக்குவரத்தையும் நம்பியே உள்ளனர்.

தினமும் 2 ரெயில்கள்

வயதானர்கள், குடும்பத்துடன் பயணிப்பவர்கள் ரெயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் திருப்பூரில் இருந்து மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு தினமும் 2 ரெயில்கள் மட்டுமே உள்ளன. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகள் ரெயில் காலை 8.50 மணிக்கு திருப்பூர் வழியாக செல்கிறது. அதுபோல் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் வழியாக இரவு 8.10 மணிக்கு செல்கிறது. இந்த 2 ரெயில்களை விட்டால் வேறு ரெயில்கள் இல்லை.

இரவு நேர ரெயிலில் எப்போதும் கூட்டம் காணப்படும். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுபோல் பண்டிகை காலம், திருவிழா காலங்களிலும் ரெயிலில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது.

தென் மாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற தொழில் நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

கூடுதல் ரெயில் இயக்கப்படுமா?

கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா கால ஊரடங்கின்போது இணைப்பு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது நிலைமை சீராகி ரெயில் போக்குவரத்து தொடங்கிவிட்ட பிறகும், இணைப்பு ரெயில் சேவை இயக்கப்படாமல் உள்ளது. இது தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையில் இருந்து கூடுதலாக ரெயில் இயக்கி தென்மாவட்ட தொழிலாளர்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தி உதவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்