போடியில் ரெயில் பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும்:போராட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

போடியில் ரெயில் பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று போராட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-02-20 18:45 GMT

திண்டுக்கல்-குமுளி அகல ரெயில் பாதை திட்ட போராட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்துக்கு போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் மனோகரன், மாரீசன், ராதாகிருஷ்ணன், அந்தோணி பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், கண்ணுச்சாமி, முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போடியில் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் ரெயில் பராமரிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும். போடியில் இருந்து கோவை, கன்னியாகுமரி, பெங்களூரு, திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் ரெயில் வசதியும், போடியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு போடிக்கும் வரும் வகையில் ஒரு ரெயில் இயக்க வேண்டும்.

திண்டுக்கல்-குமுளி அகல ரெயில் பாதை திட்டம் திண்டுக்கல்-சபரிமலை என மாற்றப்பட்டு தற்போது செயல்படுத்த முடியாத திட்டங்களின் பட்டியலில் உள்ளது. எனவே இதனை திண்டுக்கல்-தேனி, தேனி-லோயர்கேம்ப், லோயர்கேம்ப்-சபரிமலை என தனித்தனி திட்டங்களாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்