நெல் கொள்முதல் நிலையம், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

நெல் கொள்முதல் நிலையம், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

Update: 2023-03-15 18:45 GMT

சிவகங்கை,

நெல் கொள்முதல் நிலையம், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு நெல் மூடைகளை கொண்டு வரும் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் போலீசார் நேற்று மாலையில் காளையார்கோவில் அருகே புல்லுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு நெல் விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளிடம் ஒரு மூடைக்கு ரூ.30 வீதம் வசூலிப்பது தெரியவந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் இங்கு 322 மூடை நெல் விவசாயிகளிடம் வாங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் பெறப்பட்டது

இதற்காக பெறப்பட்ட தொகை ரூ.9,660-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், விசாரணையில் இந்த நெல் கொள்முதல் நிலையத்தின் கிளார்க்காக அர்ஜூனன்(வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்காலிக பணியாளரான இவர் கடந்த மாதம் 6-ந் தேதி தான் பொறுப்பேற்று உள்ளார்.

இதுவரை அவருடைய வங்கி கணக்கில் ஆன்லைன் மூலமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வரை செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக பெறப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தை அவர் யார்? யாருக்கு? கொடுக்கிறார் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்