வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 26 இடங்களில் அதிரடி சோதனை

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2022-08-12 17:45 GMT

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.

நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம்‌ ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாமக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் தற்போது அ.தி.மு.க. நாமக்கல் நகர செயலாளராகவும் உள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவர் பெயரிலும், மனைவி உமா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், அவருடைய மனைவி உமா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரூ.4.72 கோடி மதிப்பு சொத்துகள்

இதனிடையே முன்னாள் எம்.எல்‌.ஏ. பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து உள்ளதாகவும், அது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு, போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டபோது அவரது பொருளாதாரம் பின் தங்கி இருந்தது. அவர் சட்டமன்ற உறுப்பினரான பின்னர் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இந்த நிலையில், நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் வீடு, அலுவலகம், அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் திருப்பூர், மதுரையில் தலா ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார், நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

ஆடிட்டர் அலுவலகம்

மேலும் நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் நகராட்சி முன்னாள் பொறியாளர் கமலநாதன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ் ஆகியோரது வீடுகள் மற்றும் ஆடிட்டர் கோபிநாத்தின் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.

சோதனையின்போது வங்கி கணக்கு புத்தகங்கள், நிலப்பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினிகளை போலீசார் ஆய்வு செய்தனர். காலை 6 மணி அளவில் தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இரவு வரை நீடித்தது.

அ.தி.மு.க.வினர் திரண்டனர்

சோதனை குறித்த தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் வீட்டின் முன்பு திரண்டனர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் சேகர் எம்.எல்.ஏ. ஆகியோரும் அங்கு வந்தனர். ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டதால் நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், முதல் முறையாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அரசியல் கட்சியினர் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகம் உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனை நடந்த இடங்களின் விவரம் வருமாறு:-

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் இருந்து கொண்டிசெட்டிபட்டி செல்லும் சாலையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் வீடு, அவரது அலுவலகம், அசோக் நகர் முதல் தெருவை சேர்ந்த துரைசாமி என்பவரின் மனைவி சின்னம்மாள், அர்த்தனாரி பள்ளி தெருவை சேர்ந்த சுதந்திரம் என்கிற மயில் சுதந்திரம், திருநகரில் கேபிள் டி.வி. அதிபர் யோகேஷ்வரன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர், வசந்தபுரம் அருகே சின்ன வேப்பநத்தத்தை சேர்ந்த சுதாகர், துறையூர் சாலை கங்கா நகரில் உள்ள நாச்சி ரியல் எஸ்டேட் கார்த்திகேயன், ரோஜா நகரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ், பொன்னர் சங்கர் நகரை சேர்ந்த தொழில் அதிபர் மோகன், முன்னாள் நகராட்சி பொறியாளர் கமலநாதன், ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த பி.ஆர்.பி.சுரேஷ், கணேசன், திருச்செங்கோடு சாலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த திலீப், நல்லிபாளையத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி, அவரது மகன் விஜயகுமார், புதுச்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபிநாத், கொண்டிசெட்டிப்பட்டி சங்கரன், ராசிபுரம் அருகே வெங்காயபாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஆகியோரின் வீடுகளிலும், ஆடிட்டர் கோபிநாத்தின் அலுவலகம், நாச்சி ரியல் எஸ்டேட் நிறுவனம், தொழில் அதிபர் மோகன், ராமாபுரம் புதூரில் உள்ள அங்காளம்மன் டிரான்ஸ்போர்ட் மற்றும் ரெயின்போ கேபிள் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் திருப்பூரில் உள்ள உறவினர் ஹரி என்பவரின் கட்டுமான நிறுவனம், மதுரையில் உள்ள நண்பரின் கட்டுமான நிறுவன அலுவலகம் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்