ராகுல்காந்தியின் நடைபயணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது- அண்ணாமலை
ராகுல்காந்தியின் நடைபயணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்று நாகர்கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராகுலின் நடைபயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய தேசிய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மையான காலம் ராகுல்காந்தியின் குடும்பத்தினர் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இந்தியா எவற்றையெல்லாம் இழந்தது என்று பார்க்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி பிரதமராக வந்தபிறகு இன்று இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலை வந்துள்ளது.
அதனால் இதனை, நடைபயணம் செல்லும்போது ராகுல்காந்தி பார்ப்பார் என்ற நம்பிக்கை பா.ஜனதா கட்சிக்கு இருக்கிறது. இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. நமது நாட்டு மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மேலே வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் ராகுல்காந்தி அவருடைய நீண்ட, நெடிய பயணத்தில் பார்க்க வேண்டும். நரேந்திரமோடி ஏற்படுத்தி உள்ள உள்கட்டமைப்பை பார்க்க வேண்டும், இந்தியாவின் ஒற்றுமையை பார்க்க வேண்டும்.
பக்தராக மாறுவார்
காஷ்மீர் செல்லும்போது அந்த மாநிலம் எப்படி இணைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் இருந்து வந்த 3 இந்திய பிரதமர்கள் ஓட்டு அரசியலுக்கு இந்தியாவை எப்படி வேறு வேறு காலத்தில் பிரித்து வைத்திருந்தார்களோ? அவை அனைத்தையும் பிரதமர் மோடி உடைத்தெறிந்திருக்கிறார்.
அதனால் அரசியல் தலைவரான ராகுல்காந்தி தனது பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறார். அதற்கு எங்களது வாழ்த்துக்கள் இருக்கிறது. எப்போதும் இல்லாத ஒற்றுமை இப்போது இந்தியாவில் இருக்கிறது. 8 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி மோடி இணைத்துள்ளார் என்பதையெல்லாம் ராகுல்காந்தி பார்க்கும்போது நடைபயணம் முடியும்போது அவர் நிச்சயமாக மோடியின் பக்தராக மாறுவார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
கச்சத்தீவு
ராகுல்காந்தியின் நடைபயணம் எந்த ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க.வின் தயவில் இருக்கிறார்கள். நடைபயணம் தொடங்கும் இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சக்தி இல்லை, வலுவில்லை. நடைபயணம் ஆரம்பிக்கிற இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சொந்தக்குரல் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள். மத்திய அரசில் பிரதமராக நரேந்திரமோடி இருக்கிறார். நிச்சயமாக கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு வரும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பேட்டியின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் உமாரதிராஜன், முத்துராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.