'ராகுல்காந்தியே இந்தியாவின் நம்பிக்கை' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்படும். ராகுல்காந்தியே இந்தியாவின் நம்பிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-07-15 00:01 GMT

சென்னை,

கேள்வி:- கடந்த ஜூன் 23 அன்று பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர்களுடன் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றீர்கள். அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

பதில்:- இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே அணி திரண்டு விட்டது என்பதைத்தான் பாட்னா கூட்டம் உணர்த்துகிறது. எங்களது அரசியல் இலக்கு நிச்சயம் வெல்லும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேள்வி:- எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு நீங்கள் மையப்புள்ளியாக விளங்குகிறீர்கள். காங்கிரஸ் இல்லாத கூட்டணி வெற்றிக்கு உதவாது என்று முதலில் சொன்னது நீங்கள்தான்….

பதில்:- ஆமாம்! காங்கிரசையும் இணைத்துக் கொண்டுதான் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்பதை நான் சொன்னேன். 3-வது அணி அமைப்பது, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக ஆகிவிடும். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் பிரிந்து இருப்பதால் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பா.ஜ.க. வீழ்ந்துவிடும். காங்கிரசுக்கும் மற்ற சில மாநிலக் கட்சிகளுக்குமான முரண்பாடு என்பது காலப் போக்கில் மறைந்துவிடும்.

கேள்வி:- நீங்கள் எல்லோரும் ஒன்று இணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- உறுதியாக! நாங்கள் நினைக்கும் அணி சேர்க்கை அமைந்தால் நிச்சயமாக பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்.

ராகுல்காந்தி இந்தியாவின் நம்பிக்கை

கேள்வி:- இந்திய ஒற்றுமைப் பயணத்துக்குப் பின் ராகுல் காந்தியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

பதில்:- ராகுல்காந்தியின் பயணம், மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்.

கேள்வி:- மத்தியில் பா.ஜ.க ஆட்சி தொடர்ந்தால் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- அமைதி இந்தியாவை அச்சமிகு இந்தியாவாக மாற்றிவிட்டார்கள். அனைவருக்குமான இந்தியாவை ஒற்றை இந்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள். மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் மாநிலங்களையே சிதைக்கப் பார்க்கிறார்கள். ஒற்றை மொழி நாடாக, ஒற்றை மத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவிதமான எதேச்சாதிகாரத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு வேட்டு வைக்க நினைக்கிறார்கள். மீண்டும் இவர்கள் வென்றால், இந்தியா, இந்தியாவாக இருக்காது.

கவர்னர் பதவியை நீக்க வேண்டும்

கேள்வி:- கவர்னரின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு மாநிலங்களிலும் புகார் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் நிலவுகிறதே?

பதில்:- ஆர்.என்.ரவி கவர்னராக வந்தது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அவர் விடுத்த அறிக்கையானது, அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.

கேள்வி:- கவர்னரால் அடிக்கடி தொல்லைக்கு உள்ளாகும் மாநிலங்கள் இதனை எதிர்கொள்ள ஒரு பொதுவான வழிமுறை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- கவர்னர் பதவியையே நீக்கிவிடுவதுதான் ஒரே வழி!

வாரிசு அரசியல்

கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும், முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?

பதில்:- இரண்டுமே மக்கள் பணிதான். எதிர்க்கட்சித் தலைவராக வாதாடினேன். முதல்-அமைச்சராக கையெழுத்துப் போட்டு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டுகிறேன்.

கேள்வி:- காந்தி குடும்பத்தைக் குறிவைத்து வாரிசு அரசியல் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். இதில் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?

பதில்:- எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் வாரிசுகள் என்கிறார் பிரதமர் மோடி. இதெல்லாம் 30 ஆண்டுகளாக நான் கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டுகள். வேறு புதிதாக எதையாவது சிந்தித்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்