ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது: கே.எஸ். அழகிரி

பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-31 17:32 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் பாதிப்பை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வெறுப்பு அரசியலின் மூலம் மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் நடைமுறையை பாஜக பின்பற்றி வருகிறது. இத்தகைய அணுகுமுறையின் காரணமாக அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே மதநல்லிணக்கம் சீர்குலைந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

பாஜக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்க தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தின் மூலம் பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன.

இதன்மூலம் பாஜக ஆட்சியை அகற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மேலும் வலு

சேர்க்கும் வகையில் மீண்டும் பாரத நியாய யாத்திரையை ஜனவரி 14 ஆம் தேதி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20 அன்று மும்பையில் நிறைவு செய்கிறார்.

இந்த பயணத்தின்மூலம் மணிப்பூர் மக்கள் உள்ளிட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நடைபயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் தொடக்கமாக வருகிற ஆங்கில புத்தாண்டு அமைய இருக்கிறது.

பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாஜக ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்