வந்தவாசி
வந்தவாசி அருகே முயல் விடும் விழா நடந்தது.
முயல் விடும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று முயல் விடும் விழா நடைபெறுவது வழக்கம்.
முயலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள்ள சாமியிடம் காண்பித்து, முயல் மூலம் ஆசீர்வாதம் கொடுப்பார்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்றும், குழந்தைகளுக்கு தீராத நோய் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முயல் எந்த திசையில் ஓடி மறைகிறதோ அந்த பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கை ஆகும்.
அதன்படி இந்த ஆண்டு காணும் பொங்கலான இன்று மாலை முயல் விடும் விழா நடந்தது.
தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி
அப்போது டிராக்டரில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சாமியின் முன்பு குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் முயல் அங்கிருந்து சிறிது தூரம் எடுத்துச் செல்லப்பட்டு கீழே விடப்பட்டது. அங்கிருந்து தெற்கு திசையில் உள்ள கரும்பு தோட்டத்தில் முயல் ஓடி மறைந்தது.
பின்னர் சாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் மருதாடு, ஓசூர், அதியனூர், அதியங்குப்பம் போன்ற கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
நல்லூர்
இதேபோல் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் முயல் விடும் விழா நடந்தது.
அப்போது டிராக்டரில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுவாமியின் முன்பு குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் முயல் அங்கிருந்து சிறிது தூரம் எடுத்துச் செல்லப்பட்டு கீழே விடப்பட்டது. அங்கிருந்து வடக்கு திசையில் உள்ள கரும்பு தோட்டத்தில் முயல் ஓடி மறைந்தது.
பின்னர் சாமி வீதியுலா நடந்தது. முயல் விடும் திருவிழாவில் சோகத்தூர், முதலூர், ரங்கராஜபுரம், எறமலூர், மூடூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.