கடைமடை பகுதியில் கேள்விக்குறியாகும் நெல் சாகுபடி
காவிரி நீர் கிடைக்காததால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
சேதுபாவாசத்திரம்:
காவிரி நீர் கிடைக்காததால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
கடைமடை சேராத காவிரி
மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்லணை ஜூன் 16-ந் தேதி திறக்கப்பட்டது. தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களின் நீர்ப்பாசன தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் மற்றும் கல்லணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகிறது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறை வைத்து வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை ஒரு முறை கூட 5 நாட்கள் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. 2 நாட்கள், 3 நாட்கள் என பெயரளவில் மட்டும் தண்ணீர் கடைமடைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடைமடையை காவிரி நீர் எட்டவில்லை.
ஏரி நிரம்பவில்லை
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் 30 நாட்கள் தண்ணீர் வழங்கினால் ஏரி, குளங்களை நிரப்பிவிடலாம். அதே சமயம் நாற்றுவிடும் பணியும் நிறைவடைந்துவிடும். நல்ல மகசூல் கிடைக்கும். ஆடிப்பட்டமும் கை கூடிவிடும்.
இதுதொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அணைகள் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதியில் இதுவரை எந்தவொரு ஏரியும் நிரம்பவில்லை. இதனால் விதை நெல்லை இது நாள்வரை கையில் எடுக்கவில்லை.
நெல் சாகுபடி கேள்விக்குறி
விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாக காட்சி அளிக்கின்றன. ஆடி மாதம் பிறந்து 10 நாட்களாகி விட்டது. எனவே இந்த ஆண்டு கடைமடை பகுதியில் ஒரு போக சம்பா நெல் சாகுபடியையாவது மேற்கொள்ள முடியுமா? என்பது சந்தேகமே' என்றனர்.