சுற்றுலா தினத்தை கொண்டாடிய ராணி மேரி கல்லூரி மாணவிகள் - மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து வந்து அசத்தினர்

சுற்றுலா தினத்தையொட்டி சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து வந்து கொண்டாடி அசத்தினார்கள்.

Update: 2022-09-29 09:41 GMT

உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி புவியியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை மாணவிகள் சுற்றுலா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். 'சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்' என்ற தலைப்பின் கீழ் 2 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின், நிறைவு நாள் விழா கல்லூரி வளாகத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனருமான சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் முகமது நவீன், ராணி மேரி கல்லூரி முதல்வர் பி.உமா மகேஸ்வரி, புவியியல் துறை தலைவர் ஜி.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், சந்தீப் நந்தூரி பேசுகையில், 'கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கியமான துறையாக சுற்றுலாத்துறை தான் இருந்தது. இந்த துறைதான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சுற்றுலாவை பொறுத்தமட்டில், பாதுகாப்பு என்பது மிக அவசியம். கடந்த ஓராண்டில் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத் துறை சிறப்பாக செயல்படுகிறது. இன்னும் பல திட்டங்களும் கொண்டுவரப்பட இருக்கிறது' என்றார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சுற்றுலா தினத்தை பறைசாற்றும் வகையில், அந்தந்த மாநிலங்களில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை அடையாளம் காட்டும் விதமாக, மாதிரியை காட்சிப்படுத்தி இருந்தனர்.

அந்த வகையில் பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், தெலுங்கானா, கோவா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களின் பெயரிலும், ஒருங்கிணைந்த இந்தியா என்ற பெயரிலும் கண்காட்சி அரங்குகளை மாணவிகள் தத்ரூபமாக அமைத்து இருந்தனர். அந்தந்த மாநிலத்தின் சுற்றுலா தளங்கள் எவை? உணவு வகைகள் என்ன? அங்கு மேலும் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? என்பதை எடுத்துக்கூறும் விதமாக மாதிரி படங்கள், காட்சிகள் அந்தந்த அரங்குகளில் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன.

அதிலும் குறிப்பாக அந்தந்த மாநிலத்தில் கலாசாரத்தை எடுத்துக்கூறும் வகையில், மாணவிகள் மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து வந்ததோடு, அம்மாநில மொழி பாடல்களுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்கள். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகள் குழுவுக்கும், அவர்களை சார்ந்த பேராசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டன.

அதன்படி, பஞ்சாப் மாநிலக் குழுவுக்கு முதல் பரிசும், டெல்லி மாநில குழுவுக்கு 2-வது பரிசும், ஒருங்கிணைந்த இந்தியா குழுவுக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த கோப்பையை பஞ்சாப் மற்றும் ஒருங்கிணைந்த குழுவினர் தட்டிச்சென்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் ராணி மேரி கல்லூரியின் புவியியல் துறை உதவி பேராசிரியர்கள் செ.முத்துநகை, டி.யமுனா செல்வி, செ.கல்பனா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்