பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய 'கியூஆர் கோடு'

நீலகிரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய ‘கியூஆர் கோடு’ திட்டம், முதல் முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2023-07-13 21:00 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த மரங்களை பற்றி அறிய 'கியூஆர் கோடு' திட்டம், முதல் முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, கடந்த 1867-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு ஐரோப்பிய நாடுகளில் வளரும் மரங்கள், மூலிகை செடிகள் கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டது. இவை தற்போது வரை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.

இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் 'கியூஆர் கோடு' வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.2¼ லட்சம் செலவில்...

இந்த கியூஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், சம்பந்தப்பட்ட மரத்தின் அல்லது மூலிகை செடியின் தகவல்களை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குனர் பாலசங்கர் கூறியதாவது:-

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.2¼ லட்சம் செலவில் 1,000 மரங்கள் மற்றும் மூலிகை செடிகளின் பெயர்கள், பூர்வீகம், அவற்றின் பலன்கள் உள்ளிட்ட தகவல்கள் கியூஆர் கோடில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால், தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

முதல் முறை

பூங்காவில் உள்ள ஜப்பான் ரோஸ் என்ற கமாலியா, டிராகன் ட்ரீஸ் என்ற முட்டைக்கோஸ் மரம், மங்கி பசில் டீரி என்ற குரங்கேரா மரம் மற்றும் ருத்ராட்சை மரங்களிலும் கியூஆர் கோடு பொருத்தப்பட்டு உள்ளது.முதற்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பொருத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 1000 மரங்களுக்கு பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

நீலகிரியில் முதல் முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி தாவரவியல் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இது பயன்படும். நீலகிரி மாவட்டத்தில் மற்ற பூங்காக்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்